800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் மன்ஜித் சிங் தங்கப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் வெள்ளி பதக் கமும் வென்றனர். பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் 18-வது ஆசிய விளை யாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 10-வது நாளான நேற்று மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் நிலை வீராங் கனையான சீன தைபேவின் டாய் சூ யிங்கை எதிர்த்து விளையாடி னார்.

சுமார் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 13-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்விகண்டார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் டாய் சூ யிங்கை வீழ்த்தியிருந்த சிந்து இம்முறை அதேபோன்று உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினார்.

இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த சிந்து வெள் ளிப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற் றில் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் சிந்து. கடைசியாக 1982-ம் ஆண்டு சையது மோடி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார்.

முதன்முறையாக தற்போது ஆசிய விளையாட்டு பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா இரு பதக்கங்கள் கைப்பற்றியுள்ளது. அரை இறுதியில் தோல்வியடைந்த சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது. 23 வயதான சிந்து, இந்த ஆண்டில் மட்டும் 3 பெரிய தொடர்கள் உட்பட மொத்தம் 5 தொடர்களில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப், இந்தியா ஓபன், தாய்லாந்து ஓபன் மற்றும் தற்போது ஆசிய விளையாட்டு என 5 தொடர்களிலும் சிந்து வெள்ளிப் பதக்கமே கைப்பற்றி உள்ளார்.

வில்வித்தையில் வெள்ளி

வில்வித்தையில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. முஸ்கன் கிரார், மதுமிதா குமாரி, ஜோதி சுரேகா ஆகியோரை உள் ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 228-231 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.

இதேபோன்று ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் கைப் பற்றியது. வர்மா, ரஜாத் சவுகான், அமன் ஷைனி ஆகியோரை உள் ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் கொரிய அணியை எதிர்த்து விளையாடியது. 4 செட் களின் முடிவில் இரு அணிகளும் தலா 229 புள்ளிகளை பெற்றதால் வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கொரியா வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

டேபிள் டென்னிஸில் பதக்கம்

டேபிள் டென்னிஸில் ஆடவருக் கான அணிகள் பிரிவில் சத்யன், சரத்கமல், அந்தோணி அமல் ராஜ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி அரை இறுதியில் தென் கொரியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அரை இறுதியில் தோல்வியை தழுவிய இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை பெறுகி றது. ஆசிய விளையாட்டு வரலாற் றில் டேபிள் டென்னிஸில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

இறுதிப் போட்டியில் டூட்டி சந்த்

மகளிருக்கான 200 மீட்டர் ஓட் டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த், ஹிமா தாஸ் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர். ஹீட்ஸில் டூட்டி சந்த் பந்தய தூரத்தை 23.37 விநாடிகளிலும், ஹிமா தாஸ் 23.47 விநாடிகளிலும் கடந்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் அரை இறுதியில் டூட்டி சந்த் இலக்கை 23.00 விநாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு முன் னேறினார். அதேவேளையில் 2-வது அரை இறுதியில் ஹிமா தாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நடுவர் கூறுவதற்கு முன்னதாகவே ஓட தொடங்கியதால் ஹிமா தாஸ் வெளியேற்றப்பட்டார்.

மன்ஜித்துக்கு தங்கம்

ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் மன்ஜித் சிங் 1:46.15 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஜின்சன் ஜான்சன் 1:46.35 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கத்தாரின் அபுபக்கர் (1:46.38) வெண்கலப் பதக்கம் கைப்பற்றி னார்.

800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 36 வருடங்களுக்குப் பிறகு தங்கப் பதக்கம் கிடைத் துள்ளது. கடைசியாக 1982-ம் ஆண்டு சார்லஸ் போரொமியோ தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

மகளிருக்கான 500 மீட்டர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சூரியா லோகநாதன் 5-வது இட மும், சஞ்ஜீவானி ஜாதவ் 7-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித் தனர். ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அனு ராணி 53.93 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடத்தையே பிடித்தார்.

4×400 மீட்டரில் வெள்ளி

கலப்பு அணிகளுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜீவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:15:71 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. பஹ்ரைன் அணி (3:11.89) தங்கப் பதக்கமும், கஜகஸ்தான் அணி (3:19.52) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.

ஹாக்கியில் அபாரம்

ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 20-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தி யது. இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில், பி பிரிவில் 2-வது இடம் பிடித்த மலேசியாவை நாளை எதிர்கொள்கிறது.

குராஷ்

மகளிருக்கான குராஷ் போட்டி யில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிங்கி பல்ஹரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் பிங்கி 0-10 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் குல்னர் சுலைமனோவாவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மலபிரபா யாலப்பா ஜாதவ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

8-வது இடம்

10-வது நாளின் முடிவில் இந்தியா 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலத்துடன் 50 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 8-வது இடம் வகித்தது. சீனா 97 தங்கம், 64 வெள்ளி, 45 வெண்கலத்துடன் 206 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.குராஷ், வில்வித்தையிலும் இந்தியாவுக்கு வெள்ளி