ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – ஏறுமுகத்தில் பிவி சிந்து


ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிவி சிந்து தென் கொரியாவைச் சேர்ந்த கிம் கா யூன்-ஐ எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21-15 எனவும், 2-வது செட்டை 21-16 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டை 18 நிமிடங்களில் கைப்பற்றினார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர். சாய்னா நேவால் தோல்வி கண்டு வெளியேறினார்.

மொத்தம் ரூ.2.75 கோடி பரிசுத்தொகைக்கான ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 22-ம் நிலை வீராங்கனையான சீனாவின் காய் யன் யனை சந்தித்தார்.

30 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 13-21, 20-22 என்ற செட் கணக்கில் காய் யன் யனிடம் தோல்வியை தழுவினார். தன்னுடைய கடைசி 6 போட்டி தொடர்களில் 5-ல் முதல் சுற்றிலேயே சாய்னா தோல்வி கண்டு நடையை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-16 என்ற நேர்செட்டில் கொரியாவின் கிம் கா யூனை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிந்து அடுத்து தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பானை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 21-17, 21-17 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹூயாங் யூ ஜியாங்கை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் காஷ்யப் 21-18, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் 12-ம் நிலை வீரரான கென்டா நிஷிமோட்டாவை (ஜப்பான்) சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதே போல் இந்தியாவின் சவுரப் வர்மா 21-11, 21-15 என்ற நேர்செட்டில் பிரைஸ் லிவெர்டெஸ்சை (பிரான்ஸ்) வென்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் தகுரோ ஹோகி- யுகோ கோபாயாஷி ஜோடியிடம் 62 நிமிடங்கள் போராடி பணிந்தது.